தீபத்தூணில் கார்த்திகை விளக்கேற்ற அனுமதித்து, மதுரை கிளை உயர்நீதிமன்ற தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் இரு நீதிபதிகளும் ஏற்றுள்ளனர். இது தொடர்பாக தமிழக அரசு செய்த மேல் முறையீடும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.முன்னர் பின்பற்றப்பட்டு வந்த இம்முறையை மீண்டும் பின்பற்ற ஹிந்துக்கள் சிலர் அனுமதி கேட்ட வழக்கில், அது தொடர்பான ஆவணங்களை சரி பார்த்த பிறகே அதற்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை தனி நீதிபதி அனுமதி வழங்கினார். இப்படி ஒரு வழக்கே போடப்படாமல் இருந்தால் பிரச்னை இல்லை. அல்லது நீதிபதி அதற்கு அனுமதி மறுத்திருந்தாலும், அரசை குறை கூறும் அவசியம் ஏற்பட்டிருக்காது.ஆனால், ஹிந்துக்களுக்கு ஆதரவாக வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பை ஹிந்து நம்பிக்கைகளைக் காக்க வேண்டிய ஹிந்து சமய அறநிலையத் துறை ஏனோ விரும்பவில்லை.சிறுபான்மையினர் தரப்பில் யாரும் ஆட்சேபிக்காத இந்தத் தீர்ப்புக்கு எதிராக அறநிலையத் துறை தானாகவே மேல்முறையீடு செய்தது. மேல்முறையீடு நிராகரிக்கப்பட்ட பிறகும் தீர்ப்பை ஏற்கவில்லை.இது முற்றிலும் ஹிந்துக்கள் சம்பந்தப்பட்ட விவகாரம். இதை சிறுபான்மையினர் கருத்தோடு சேர்த்து அரசு குழப்பியிருக்கத் தேவையில்லை. தீபத்தூணில் விளக்கேற்ற அனுமதித்தால் மத நல்லிணக்கம் கெடும், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்பது விந்தையான வாதம். உண்மையில், தீர்ப்பை செயல்பட விடாமல் தடுப்பதே அத்தகைய பிரச்னைகளுக்கு வழி வகுக்கும். இப்படியெல்லாம் ஹிந்து உணர்வுகளுக்கு எதிராக செயல்பட்டால் சிறுபான்மையின வாக்குகள் குவியும் என்பது அரசின் அரசியல் கணக்கு. அது சரியா தவறா என்பதை தேர்தல்தான் நிரூபிக்க வேண்டும். இவ்விவகாரம் தொடர்பாக திமுக கூட்டணிக் கட்சியினர் தெரிவிக்கும் கருத்துகள் நீதிமன்ற அவமதிப்புக்கு பொருந்துபவை. ஆனால், அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் அவர்கள் பேசி வருகின்றனர். ஹிந்து உணர்வுகளை அரசு மதித்தால் பாஜகவுக்கு பணிந்து விட்டதாக ஆகாது. ஹிந்துக்கள் வேறு, பாஜக வேறு என்ற புரிதல் அரசுக்கு இன்னும் வரவில்லை என்றே தோன்றுகிறது. அரசின் ஹிந்து எதிர்ப்புப் போக்கு புதியதல்ல. ஹிந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்ல மறுப்பதிலிருந்து சனாதன எதிர்ப்புப் பேச்சுக்கள் வரை, அது ஒரு தொடர்கதையாகவே நீடிக்கிறது.திருப்பரங்குன்றம் விவகாரம் அந்தக் தொடர் கதையில் ஒரு அத்தியாயம். அவ்வளவுதான்.- துக்ளக் சத்யா, மூத்த பத்திரிகையாளர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *