தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம், ஸ்ரீரங்கம் வட்டக்கிளையின் 16ஆம் ஆண்டு விழா, ஓய்வூதியர் தின விழா, மற்றும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் – வீர வாஞ்சிநாதன் புகழ் பரப்பும் விழா ஆகியவை 18.12.2025 (வியாழக்கிழமை) அன்று காலை முதல் ஸ்ரீரங்கம் S.R. திருமண மஹாலில் வெகு சிறப்பாக நடைபெற்றது.இந்த விழாவின் ஒரு பகுதியாக, வாசன் கண் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு, நிகழ்வில் பங்கேற்ற அனைத்து மூத்த குடிமக்களுக்கும் இலவச கண் பரிசோதனை செய்து, தேவையான மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர்.

இதில் கலந்து கொண்ட டாக்டர் பரவின் அந்தராஜ் (Phaco Surgeon), அனைவருக்கும் சேவை செய்யும் தமது விருப்பத்தை வெளிப்படுத்தி, சங்கத்திற்கும் உறுப்பினர்களுக்கும் தனது அன்பும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.விழாவில் மதிப்புற தலைவர் திரு. கே. கங்காதரன் அவர்கள் சங்கத்தின் மேன்மைகள் மற்றும் செயல்பாடுகளை எடுத்துரைத்தார். மேலும், ஸ்ரீரங்கம் வட்டக்கிளை தலைவர் திரு. ஆர். பாலகிருஷ்ணன் அவர்கள் ஆற்றிவரும் சமூக மற்றும் சங்கப் பணிகளை பாராட்டி, அவற்றை தொடர்ந்து சிறப்பாக முன்னெடுக்க வாழ்த்துரை வழங்கினார்.இதனைத் தொடர்ந்து, திரு. அ. இளங்குமார் சம்பத், வழக்குரைஞர், அவர்கள் ஆற்றிய கருத்தாழமிக்க எழுச்சி உரையில், போராளிகள் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மற்றும் வீர வாஞ்சிநாதன் ஆகியோரின் தியாகங்கள், போராட்டங்கள் மற்றும் உண்மையான வரலாற்றுச் செய்திகள் ஆகியவற்றை அனைவரும் வியக்கும் வகையில் எடுத்துரைத்து, அந்த மாபெரும் தியாகிகளுக்கு புகழ் அஞ்சலி செலுத்தினார்.இந்த விழா, ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் மூத்த குடிமக்களிடையே சமூக ஒற்றுமை, வரலாற்று விழிப்புணர்வு மற்றும் நலன் சார்ந்த சேவைகளை வலுப்படுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாக அமைந்தது.

