சென்தமிழகத்தில் நாளையும், நாளை மறுதினமும் 2 நாட்களுக்கு குளிர் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் நாளை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். 15, 16 தேதிகளில் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், 17-ம் தேதி தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் 18, 19 தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான குளிர் அளவுகளின்படி, மலைப்பகுதியில் அதிகபட்சமாக ஊட்டியில் 7 டிகிரி, கொடைக்கானல், குன்னூரில் தலா 9 டிகிரி, ஏற்காட்டில் 10 டிகிரி, சமவெளிப் பகுதிகளில் அதிகபட்சமாக திருத்தணியில் 16 டிகிரி, வேலூர், தருமபுரியில் 17 டிகிரி, புதுச்சேரி, சேலத்தில் தலா 19 டிகிரி, சென்னை நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம், மாமல்லபுரம், கோவையில் தலா 20 டிகிரி குளிர் பதிவாகியுள்ளது.

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 2 நாட்களுக்கு குறைந்தபட்ச வெப்பநிலை (குளிர்) ஓரிரு இடங்களில் வழக்கத்தைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை குறைவாக இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *