கரூரில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி நடந்த கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான நிலையில், இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு முதல் நாள் அவை ஒத்திவைக்கப்பட்டது. இன்று காலை அவை கூடியதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விளக்கம் அளித்தார்.
அதாவது, தவெக சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று 11 நிபந்தனைகள் உடன் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. போதிய எண்ணிக்கையில், அதாவது 517 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதுமட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் காவல் உயர் அதிகாரிகள், காவலர்கள் என 91 பேர் வரவழைக்கப்பட்டிருந்தனர். மொத்தம் 606 பேர் பணியில் இருந்தது கவனிக்கத்தக்கது. 10,000 பேர் வருவர் என்று கோரிக்கை மனுவில் கூறப்பட்ட நிலையில், அதைவிட அதிகமாக வருவார்கள் என்று கணித்து கூடுதல் பாதுகாப்பு வசதிகள் செய்து தரப்பட்டன.
ஆனால் அறிவிக்கப்பட்ட 12 மணி நேரம் கழிந்து 7 மணி நேரம் தாமதமாக வந்தார். இந்த விஷயம் தான் கூட்ட நெரிசலுக்கு காரணமாக அமைந்தது.
காலை முதல் காத்திருந்த மக்களுக்கு குடிநீர், கழிப்பறை போன்ற வசதிகள் செய்து தரப்படவில்லை.
சம்பவம் நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்ட பரப்புரை கூட்டத்தில் போதிய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன. சுமார் 12,000 பேர் பங்கேற்றிருந்தனர்.
