புதுடில்லி:
டில்லியில் நடந்த கார் குண்டுவெடிப்பில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய பிரதமர் மோடி, இந்த சதிக்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன்பு நிறுத்தப்படுவார்கள் எனவும் கூறியுள்ளார்.
டில்லி செங்கோட்டை அருகே நேற்று முன்தினம்( நவ.,10) காரை வெடிக்கச் செய்து பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 12 பேர் உயிரிழந்தனர். 16 பேர் காயமடைந்து லோக் நாயக் ஜெய்பிரகாஷ் நாராயண் (எல்என்ஜேபி) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை நேற்று முன்தினம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் சந்தித்து ஆறுதல் கூறியிருந்தார்.
இந்நிலையில் பூடான் சென்றிருந்த பிரதமர் மோடி, இன்று மதியம் டில்லி திரும்பினார். உடனடியாக மருத்துவமனைக்கு சென்ற அவர், குண்டுவெடிப்பில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறி, நலம் விசாரித்தார். அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.
